செவ்வாய், 29 மே, 2012

வித்தியாசமான தீர்ப்பு

வித்தியாசமான தீர்ப்பு
நமது அரசியலமைப்பு சட்டத்தில், சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. இதில் ஏற்றத்தாழ்வு இல்லை. ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், ஜாதி, மதம், மொழி வித்தியாசம் இல்லை என்று கூறுகின்றது.ஆனால் சமீபத்திய உச்ச நீதி மன்ற உத்திரவு நமது அரசியலமைப்பு சட்டம் வெறும் கண் துடைப்பு தானோ என்று ஐயத்தை ஏற்படுத்துகின்றது. அப்படியென்ன உச்ச நீதி மன்ற ஆணை என்று கேட்கின்றீர்களா ?    நான்கு சக்கர வாகனங்கள் அதாவது கார் வாகனம் உபயோகிப்பவர்கள் கருப்பு கண்ணாடியோ அல்லது கருப்பு ஃபிலிம் ஒட்டப்பட்ட கண்ணாடிகளையோ  பயன் படுத்தக்கூடாது என்று பொது நல வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம்   தீர்ப்பு அளித்துள்ளது. நீதி மன்றத்தின் தீர்ப்பையோ அல்லது நீதி அரசரையோ விமரிசிக்கலாகாது எனினும் நமது உள்ளக்குமுறலை சொல்லித்தானே ஆகவேண்டும்.  மேற்படி உத்திரவு சாதாரண மக்களுக்கு மட்டுமே. அதி முக்கிய நபர்களுக்கு இல்லை. அதாவது அந்தந்த மாநில அரசால் V V I P என்று அடையாளம் காணப்பட்ட நபர்கள் இதிலிருந்து விலக்கு பெறுகின்றார்கள். யார் அந்த  அதி முக்கிய நபர்கள் ? அரசியல்வாதிகளா, அரசாங்க அதிகாரிகளா, திரையுலக பிரபலங்களா, பணபலம், அதிகாரபலம், அரசியல் பலம் பெற்ற தாதாக்களா   என்று தீர்ப்பு குறிப்பிடவில்லை. மாநில அரசால் முடிவு செய்யப்படும் நபர்கள் என்று பொதுப்படையாக கூறியுள்ளது. நாள்தோறும் கணக்கிலடங்கா கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்கள் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட கார்களில் நடப்பது போலவும் அதை தடுத்து நிறுத்தவே இந்த உத்திரவு என்பது போலவும் உள்ளது இந்த தீர்ப்பு. அப்படி எத்தனை குற்றங்கள் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட கார்களில் நடைபெற்றது, எத்தனை குற்றங்கள் கண்டு பிடிக்க முடியாமல் போனது என்பது யாமறியோன் பராபரமே. இந்த உத்திரவிற்கு சென்னை மாநகர காவல் துறை ஆணையரின்  உத்திரவான வாடகைதாரர்களின்  முழு விவரங்களை வீட்டு உரிமையாளர் அளிக்க வேண்டுமென்பதற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. குற்றங்கள் குறைகிறதோ இல்லையோ காவல் துறையினரின் பாக்கெட் நிறையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.  மாறாக கார்களில் கருப்பு கண்ணாடி பொருத்த விரும்புபவர்கள் காவல் துறையின் அனுமதி பெற்று பொருத்தலாம் என்று பாஸ்போர்ட் பெறுவதற்கு ஒப்புக்கு சப்பாணி காவல் துறை விசாரணை நடைமுறையிலிருப்பதைப்போல   அனுமதித் திருக்கலாம். இன்றைய பொருளாதார சூழ்நிலையில் தகவல் தொழில் நுட்பத்துறை, மனிதவள மேம்ப்பாட்டுத்துறை, மருத்துவத்துறை, ஊடகத்துறை  இன்னும் பல துறைகள் விரிவடைந்துள்ள நிலையில் கார் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சென்னை போன்ற வெயில் கொளுத்தும் நகரங்களில் வெய்யிலின் தாக்கத்தை குறைக்கவே கருப்பு கண்ணாடி பயன் படுத்தப்படுகிறது. எங்கோ ஒரு சில இடங்களில் நடந்த அல்லது நடக்கும் நிகழ்வுகளுக்காக ஒட்டு மொத்த அப்பாவி மக்கள் பயன்படுத்த தடை விதிப்பது எந்த விதத்திலும் நியாயமாக படவில்லை.   குற்றம் புரிபவர்கள் சாதாரண மக்கள் இல்லை. பணபலம், அதிகார பலம் கொண்டவர்கள் மட்டுமே. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மறு பரிசீலனை செய்யப்படவேண்டிய ஒன்று. இல்லையெனில் தீப்பெட்டியால் தீ விபத்து நடைபெறுகிறது ஆகவே தீப்பெட்டிக்கு தடை விதிக்க வேண்டுமென்றும், கத்தியால் கொலை, கொள்ளை போன்றவை நடைபெறுகிறது ஆகவே கத்தி பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென்றும், வாகனங்களால் விபத்து ஏற்படுகின்றது ஆகவே சாலைகளில் வாகனம் செல்வதை தடை செய்ய வேண்டுமென்றும் யாராவது பொது நல வழக்கு போடுவார்கள். நமது நீதி அரசர்களும் அதற்கு தடை விதித்தாலும் விதிக்கலாம். அப்துல் கலாமிற்கே அரஸ்ட் வாரண்ட் கொடுத்த நீதி அரசர்களும் இருக்கின்றார்களே நமது நாட்டிலே.
முக்கிய குறிப்பு : இது நீதி மன்றத்தின் தீர்ப்பின் மீதான விமரிசனம் இல்லை. ஒரு ஆதங்கமே.