புதன், 6 ஜூன், 2012

கலியுக குந்தி தேவி

முன்குறிப்பு : இது தனிப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டில்லை. 75 வயதைக்கடந்த ஒரு மூதாட்டியின் திருவிளையாடலும் அதனை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் அவர்களின் மெத்தன நடவடிக்கையினையும் கவனத்திற்கு கொண்டு வருவதே இந்த பதிவின் நோக்கம். 

மகாபாரத இதிகாசத்தில், பஞ்ச பாண்டவர்களை குந்தி தேவி பெற்றெடுத்தாள்  என்றும் ஆனால் அவர்களுக்கு முன்பே கர்ணனை பெற்றெடுத்தாள் என்பதனையும் அனைவரும் அறிவோம். ஆனால் நான் சொல்லப்போகும் கலியுக குந்தி தேவி  திருமணத்திற்கு முன்பே 5 மக்களை பெற்றெடுத்தாள் என்பதுதான் நான் இன்று சொல்லப்போகும் செய்தி. கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெய்வேலி நகரில் கோபாலகிருஷ்ணன் என்கிற ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பணி புரிந்து வந்தார். மேற்படி இராணுவ வீரர்,  தான் 1906 -ம் வருடம் பிறந்ததாக ஒரு குத்து மதிப்பாக கூறி   1926 -ம் வருடம் இராணுவத்தில் சேர்ந்து 1947 -ம் வருடம் ஓய்வு பெற்றார். பால சந்திரம்மாள் என்கிற சட்டபூர்வமான மனைவி இருக்கையில்    1968 -ம் வருட வாக்கில் அதாவது அந்த ராணுவ வீரர் தன்னுடைய 60 வயதை கடந்த பிறகு  சுசிலா என்கிற பெண்மணி துணைவியாக வந்து சேர்ந்தார். துணைவி, இணைவி இதெல்லாம் நியாயமா என்று நாம் கேட்கவில்லை. அவருக்கு திராணி இருந்தது. 60 வயதிற்கு பிறகும் துணைவி வைத்துக்கொண்டார். 1984 -ம் வருடம் இராணுவ வீரர் காலமானார். அவர் காலமாவதற்கு ஒரு வாரம் முன்பு,  மிகச்சரியாக சொல்லப்போனால் பிப்ரவரி 11 -ம் தேதி நாம் உன் உயிரை எடுக்கப்போகிறேன் என்று எமன் -மெயில் அனுப்பியதால்,  பிப்ரவரி 4  -ம் தேதி அவர் ஒரு உயில் எழுதுகிறார். அதில் அவர் என்ன சொல்லியிருக்கின்றார் என்றால், தனக்கு 81 வயது நடப்பதாக கூறியுள்ளார். அதாவது அவர் 1903 –ம் வருடம் பிறந்தவர் என்றாகின்றது. இராணுவத்தில் சேருவதற்கு 20 வயது உச்ச வரம்பு என்பதனாலோ என்னவோ 3 வயது  குறைத்து 1906 -ம் வருடம் பிறந்ததாக கூறியுள்ளார். சரி விடுங்கள் வயது பிரச்சினையை. உயிலில் என்ன சொல்லியிருக்கின்றார் என்று பார்ப்போம்.  தனக்குபிறகு தன் சொத்துக்கள், குடும்ப ஓய்வூதியம்  அனைத்திற்கும் தனது துணைவியே உரிமையாளராகின்றார் என்று சொல்லியதோடு நில்லாமல் ஊரிலுள்ள இல்லாத பொல்லாத சொத்துக்களையும், அவை எங்கே இருக்கின்றன, எந்த திசையில் இருக்கின்றது என்று எதுவும் குறிப்பிடாமல், அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ள இடம் என்னுடையது, எனக்கு இந்த வீட்டில் பாத்தியதை உள்ளது, அந்த வீட்டில் பாத்தியதை உள்ளது என்று சொத்து குறித்து முழு விவரம் குறிப்பிடாமல் மொட்டையாக ஒரு உயில் எழுதி வைத்து அதை பதிவும் செய்துவிட்டு ஒரு வார காலத்திற்குள் இறந்து போயுள்ளார். உண்மையிலேயே இறந்து போனாரோ அல்லது தனது துணைவர் உடல் நலமின்றி வேதனைப்படுவதைக்கண்டு துணைவியே கருணைக்கொலை செய்தாரோ தெரியாது. காரணம் துணைவியே ஒரு மருத்துவ ஆயா, பேராசை படைத்தவர். அந்த துணைவியே   இப்போது நான் சொல்லப்போகும் .கலியுக  குந்தி தேவி.    
இராணுவ வீரரின்   சட்ட பூர்வமான முதல் மனைவி அவருக்கு முன்பே அதாவது 21 -07 -1975 காலமாகிவிட்ட நிலையில் பிப்ரவரி 11 , 1984  -ம் வருடம் காலமான   இராணுவ வீரரின்   குடும்ப ஓய்வூதியம் காலமாகலாமா ? அதனையாவது உயிர்ப்பிக்க வேண்டாமா   என்கிற "நல்லெண்ணம்" அவருடைய துணைவிக்கு உதித்தது. என்ன செய்வது ? சட்டப்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கையில் அவருடன் விவாகரத்து நடை பெறாத நிலையில், ஊரறிய உலகறிய திருமணம் நடைபெற்றிருந்தாலும்   இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் கிடையாதே ! என்ன செய்வது. என்னங்க இது ! படிப்பறிவில்லாத காலத்தில் ஆப்பிள் செடியிலிருந்து கீழே விழுந்த ஆப்பிளிலிருந்து பூமிக்கு புவி ஈர்ப்பு விசை உள்ளதை நியூட்டனால் கண்டுபிடிக்க முடிந்தபோது கேவலம் இந்த ஊழல் பெருச்சாளிகள் நிறைந்த அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் ஏமாற்ற வழியா கிடையாது. (விஞ்ஞான ஆர்வர்கள் மன்னிக்கவும். நியுட்டன் கண்டுபிடிப்பிற்கு இணையாக என்று சொல்ல வந்தேனேயொழிய நியுட்டனின் கண்டுபிடிப்பை மட்டம் தட்டவில்லை.) பார்த்தார் சுசிலா அம்மையார். அதான் துணைவியார்.
தனக்கு,  10 -08 -1975 அன்று, அதாவது முதல் மனைவி இறந்து சரியாக 19  நாட்கள் கழித்து கருமாதி எல்லாம் முடிந்த பிறகு கோபாலகிருஷ்ணனுடன் 2 வது   திருமணம்  நடை பெற்றதாக இராணுவ ஆவண காப்பகத்தில் கூறி 11 ஆண்டுகள் கழித்து ஓய்வூதியம் கோரி விண்ணப்பிக்கிறார். இராணுவ வீரர் காலமாகிய ஒரு வருடத்திற்குள் குடும்ப ஓய்வூதியம் கோரப்படவேண்டும், கால தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை அங்கீகரிக்க இந்திய அரசின் அனுமதி தேவை என்கிற விதிமுறை இருந்தபோதிலும், நமது இராணுவ ஆவண காப்பு அலுவலகம் திருமதி சுசீலாவிற்கு குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரைத்துள்ளது. குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியே இல்லாத ஒரு நபர், பொய்த்தகவல்களையும், போலி ஆவணங்களையும் அளித்து இன்று வரை ஓய்வூதியம் பெற்று வருகின்றார். அம்மையார் அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லையே அவனவன்  லட்சம், கோடி என்று அரசை ஏமாற்றி ஆட்டையை போடுகையில், ஏதோ வயிற்றுப்பிழைப்பிற்காக  ஒரு சில நூறுகளை ஆட்டை போடுவதில் பாவமில்லை என்று விட்டு விடலாம். ஆனால் ஆசை யாரை விட்டது ? புத்தர் இல்லையே ஆசையை துறப்பதற்கு. தனக்கு உரிமையே இல்லாத சொத்திற்கு ஆட்டை போட முற்பட்டார். என்னய்யா இது, கலியுக குந்தி தேவி என்று சொல்லிவிட்டு எங்கெங்கோ கதையை கொண்டு செல்கின்றீரே என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. மன்னிக்கவும். விஷயத்திற்கு வருகின்றேன். 10 -08 -1975 அன்று தனக்கு திருமணம் நடைபெற்றதாக கூறும் குந்தி தேவி மன்னிக்கவும், சுசிலா அம்மையாரின் வாரிசு சான்றிதழில் அந்த தேதியில் அவருக்கு 5 ,   எவ்வளவு, ஒன்றல்ல இரண்டல்ல, மூன்றல்ல 5 வாரிசுகள் இருப்பதாக ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று வாரிசு சான்றிதழ்கள்  கூறுகின்றது. அதைத்தான் என்னுடைய முந்தைய பதிவாகிய அம்பானியின் வாரிசாக வேண்டுமா அல்லது டாட்டா பிர்லா வின்  வாரிசாக வேண்டுமா என்று பார்த்தீர்கள். இப்போது சொல்லுங்கள்,  10 -08 -1975 அன்று 5 வளர்ந்த வாரிசுகள் இருக்கும்போது அன்றுதான் தனக்கு திருமணம் நடைபெற்றது என்று கூறும் திருமதி சுசிலா, கலியுக குந்தி தேவியா இல்லையா ? போலி வாரிசு சான்றிதழ்கள் பெறுவதும், முறைகேடாக குடும்ப ஓய்வூதியம் பெறுவதுடனும் இவரது திருவிளையாடல் நின்றதா என்றால் இல்லை. வட்டாட்சியர், இராணுவ ஆவண காப்பகம் ஆகியோரை  ஏமாற்றியதோடில்லாமல்,  பதிவுத்துறை, காவல் துறை, நீதிமன்றம் போன்ற பல துறைகளையும் ஏமாற்றி வலம் வருகின்றார். சட்டம் என்ன செய்கிறது ? சட்டப்படி சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. மோசடிகள் பல புரிந்தும் உல்லாசமாக உலா வருகிறார் இந்த 75  வயதினை தாண்டிய மூதாட்டி.     ஆகவே வாசகர்களே இது தனிப்பட்ட நபர் மீதான காழ்ப்புணர்ச்சி இல்லை. நாட்டில் என்னவெல்லாம் அநியாயம் நடக்கின்றது, எப்படியெல்லாம் நடக்கின்றது என்பதனை வெளிச்சம் போட்டு காட்டவே இந்த பதிவு..